திருவாரூரில், மாதுளை பழம் விலை இரு மடங்கு உயர்வு
திருவாரூரில், மாதுளை பழம் விலை இரு மடங்கு உயர்வு
திருவாரூரில், மாதுளை பழம் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. 1 கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழங்கள் விற்பனை
திருவாரூர் நகரில் ஏராளமான காய்கறிகடை, பழக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகள் பழங்களை வாங்கி கொண்டு திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வது வழக்கம். திருவாரூர் கடைவீதிக்கு திருச்சி, கும்பகோணம், சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
இருமடங்கு விலை உயர்வு
கடந்த வாரம் திருவாரூரில் 1 கிலோ ரூ.160-க்கு விற்பனையான ஆப்பிள் பழம் நேற்று ரூ.200-க்கு விற்பனையானது. ரூ.100-க்கு விற்பனையான மாதுளை பழம் ரூ.180 முதல் ரூ.240 வரை விற்பனையானது. ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆரஞ்சு பழம் ரூ.120-க்கு விற்பனையானது. ரூ.60-க்கு விற்பனையான சாத்துக்குடி ரூ.80-க்கு விற்பனையானது.
அதேபோல் அன்னாச்சி, திராட்சை, செவ்வாழை, கொய்யாப்பழங்கள் ரூ.30 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்து விற்பனையானது.
தற்போது மாம்பழங்கள் சீசனில் உள்ளதால் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் 4 கிலோ மாம்பழம் ரூ.100 வரை விற்பனையானது. மங்கன்பள்ளி ரூ.80-க்கும், இமாம்பசந் ரூ.100-க்கும், ஒட்டு மாம்பழம் ரூ.25-க்கும், மல்கோவா ரூ.80-க்கும், செந்தூரா ரூ.80-க்கு விற்பனையானது.
வரத்து குறைவு
இதுகுறித்து பழ மொத்த வியாபாரிகள் கூறுகையில்,
தஞ்சைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்கு பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் பழங்கள் உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால் வரத்து குறைந்து பழங்கள் விலை அதிகரித்துள்ளது. மேலும் வெயிலில் பழங்கள் வாடி வீணாக போவதாலும் உற்பத்தி பாதிக்கிறது. இதனாலும் விலை அதிகரித்துள்ளது என்றனர்.