தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம்
தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடந்து வருகிறது.
தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் தழும்பு இல்லாத வகையில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடந்து வருகிறது. இந்த முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் பொன் இசக்கி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம்
தூத்துக்குடி மாவட்ட குடும்பநலத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் பொருட்டு இருவார விழா நேற்று முன்தினம் முதல் வருகிற 4-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. அதிக அளவில் ஆண்கள் குடும்பநல கட்டுப்பாடு சிகிச்சையை ஏற்கும் வகையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் அனைத்து வேலை நாட்களிலும் நடக்கிறது.
ஊக்கத்தொகை
இந்த முகாமில் வருகிறவர்களுக்கு சிகிச்சை முடிந்ததும் அரசு ஈட்டுத் தொகையாக ரூ.1,100 மற்றும் சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.200-ம் வழங்கப்படும்.
முகாம் ஏற்பாடுகளை மருத்துவம் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் பொன் இசக்கி, மருத்துவக்கல்லூரி டீன் சிவக்குமார், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கற்பகம், துணை இயக்குனர்கள் பொற்செல்வன் (தூத்துக்குடி), ஜெகவீரபாண்டியன் (கோவில்பட்டி), மாநகர நல அலுவலர் அரண்குமார், நகர் நல அலுவலர் விஜய் ஆகியோர் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.