தடைக்காலம் முடிவடைந்ததால், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


தினத்தந்தி 15 Jun 2022 3:30 PM IST (Updated: 15 Jun 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால், விசைப்படகு மீனவர்கள் வாண வேடிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால், விசைப்படகு மீனவர்கள் வாண வேடிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 264 விசைப்படகுகள், வேம்பாரில் 48 விசைப்படகுகள், தருவைகுளத்தில் 226 விசைப்படகுகள் ஆக மொத்தம் 538 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

வாண வேடிக்கை

இந்த தடைக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலையில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் கடந்த 4 மாதமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் தடைக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து படகுகளில் ஐஸ்கட்டிகள், வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுதல், டீசல் நிரப்புதல் போன்ற பணிகளை மேற்கொண்டு தயாரானார்கள். நேற்று அதிகாலை 5 மணி அளவில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். அப்போது பட்டாசுகள் வெடித்து வாண வேடிக்கையுடன் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுழற்சி முறைகள் விசைப்படகுகள் கடலுக்கு செல்கின்றன. அதன்படி நேற்று மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 126 விசைப்படகுகளும், தருவைகுளத்தில் இருந்து 94 விசைப்படகுகளும், வேம்பாரில் இருந்து 40 விசைப்படகுகள் ஆக மொத்தம் 260 விசைப்படகுகளில் மீனவர்கள் புறப்பட்டு சென்றனர். மீண்டும் விசைப்படகுகள் கடலுக்கு சென்று இருப்பதால் மீன்கள் வரத்து அதிகரிக்கும். இதனால் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story