தூத்துக்குடி பஜார் கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு


தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பஜார் கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி பஜார் கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைகளில் குவிந்து பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

நவராத்திரி விழா

நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில்கள் மற்றும் மக்கள் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். இந்த கொலுவில் பல்வேறு விதமான கடவுள் பொம்மைகள் வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். இந்த ஆண்டு வருகிற 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதனால் மக்கள் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் தூத்துக்குடி பஜாரிலுள்ள கடைகளில் விற்பனைக்காக ஏராளமான கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பல்வேறு வகையான, விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்து உள்ளன. இங்கு ரூ.20 முதல் ரூ.10 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கொலு செட் பொம்மைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

விறுவிறுப்பு

இது குறித்து பொம்மை விற்பனையாளர் ரத்னா மோகன் கூறும் போது, கொரோனா முடக்கத்துக்கு பிறகு இந்த ஆண்டு நவராத்திரி விழா களைகட்டி உள்ளது. மக்கள் ஆர்வமுடன் கொலு பொம்மைகளை வாங்குவதற்காக வருகின்றனர். இதனால் பொம்மை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பல புதிய வகையான பொம்மைகள் விற்பனைக்காக வந்து உள்ளன. தெருவோர கடை வியாபாரிகளை சித்தரிக்கும் வகையிலான பொம்மைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. பஜனை செட், குடும்பத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பறவைகள் குடும்பம், கொல்கத்தா காளி சிலை, 25 வகையான அம்மன் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு கடவுள் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர் என்று கூறினார்.


Next Story