தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில்பனைப்பொருள் விற்பனை அங்காடி
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பனைப்பொருள் விற்பனை அங்காடியை கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பனை பொருள் விற்பனை அங்காடியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று திறந்து வைத்தார்.
விற்பனை அங்காடி
நெல்லை மாவட்ட பனைப்பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பனை பொருள் விற்பனை அங்காடி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு நெல்லை மாவட்ட பனைப்பொருட்கள் கூட்டுறவு சம்மேளனத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.சரவணக்குமார் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (கதர் கிராத தொழில்கள்) எல்.சுதாகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி அங்காடியை திறந்து வைத்து பேசினார்.
பனைவெல்லம்
அப்போது, தமிழக அரசின் அறிவிப்பின்படி பனைப்பொருள் விற்பனை அங்காடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அங்காடி மூலம் மக்களுக்கு தரமான பனைவெல்லம், பனங்கற்கண்டு, சுக்குகாபி மற்றும் பதநீர் பருவக்காலங்களில் பதநீர், இதர பனைப்பொருட்கள், கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களும் மக்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்வது இந்த சம்மேளனத்தின் நோக்கம் ஆகும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பனைப்பொருட்கள் கூட்டுறவு சம்மேளன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.