தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில்ஏழை மக்களுக்கு இலவசமாகமனு எழுதிக் கொடுக்க நடவடிக்கை: கலெக்டர்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில்ஏழை மக்களுக்கு இலவசமாகமனு எழுதிக் கொடுக்க நடவடிக்கை: கலெக்டர்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மனு எழுதிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபாதையில் அமர்ந்து, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மனு எழுதிய பெண்ணிடம் விசாரணை நடத்தி, ஏழை மக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

முதியவர்

திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக் கிணறு பகுதியை சேர்ந்தவர் சிவானந்தபெருமாள் (வயது 80). இவர் நேற்று காலையில் தனது மனைவியுடன் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுப்பதற்காக அமர்ந்து இருக்கு பகுதியில் அமர்ந்து இருந்தார். அங்கு வந்த கலெக்டர் செந்தில்ராஜ், சிவானந்தபெருமாளிடம் மனுவை வாங்கினார். அப்போது, முதியவர்களிடம் ஊரில் இருந்து எப்படி வந்தீர்கள் என்று கலெக்டர் கேட்டார். அதே போன்று எவ்வளவு தொகை செலவு செய்து வந்தீர்கள் என்றும் விசாரித்தார். அந்த மனுவில் சிவானந்தபெருமாள் கைரேகைதான் வைத்து இருந்தார். இதனால் மனு எங்கு எழுதினீர்கள் என்று கேட்டார். அதற்கு முதியவர் கலெக்டர் அலுவலக வாசலில் உள்ளவர்கள் எழுதி கொடுத்ததாகவும், அதற்காக ரூ.50 பணம் கொடுத்ததாகவும் கூறினார். ஒரு ஏழை தம்பதியினர் மனு கொடுக்க குறைந்தபட்சம் ரூ.200 வரை செலவு செய்வதாக தெரிவித்தனர்.

பரபரப்பு

இதனை தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியில் நடந்து சென்றார். அங்கு மனு எழுதி கொடுத்துக் கொண்டு இருந்த ஒரு பெண்ணின் அருகே சென்று நடைபாதையின் ஓரத்தில் அமர்ந்தார்.

அவர் அந்த பெண்ணிடம் மனு எழுதவதற்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டார். அந்த பெண், மனுவின் அளவை பொறுத்து ரூ.30 முதல் ரூ.50 வரை பெறுகிறோம். சிலர் பணம் கொடுக்காமலும் சென்று விடுகிறார்கள். இதுதான் எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. திங்கட்கிழமைகளில் ரூ.500 முதல் ரூ.700 வரை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதனை கேட்ட கலெக்டர், இனிமேல் பணம் வாங்காமல், கலெக்டர் அலுவலக உள்பகுதியில் அமர்ந்து, மனு எழுதி கொடுங்கள். உங்களுக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு தொகை கிடைக்குமோ, அந்த தொகையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார்.

இதனை கேட்ட அந்த பெண் ஆச்சரியமாக பார்த்தார். அவர் சிறிது தயக்கத்துக்கு பிறகு ஒப்புக் கொண்டார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த ஒருவர் அந்த பெண்ணிடம், உங்களிடம் பேசிக் கொண்டு இருப்பவரை யார் என்று தெரியுமா?, அவர்தான் மாவட்ட கலெக்டர் என்று கூறினார்.

இதனை கேட்ட அந்த பெண் அதிர்ச்சியடைந்து பதறியபடி எழுந்து வணக்கம் செலுத்தினார். பின்னர் கலெக்டர் புன்னகையுடன், உங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இலவசமாக மனு எழுதி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு சென்றார்.

இலவசமாக..

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, ஒரு ஏழை வயதான தம்பதியினர் மனு கொடுக்க வந்து இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, மனு கொடுப்பதற்காக காலையிலேயே வீட்டில் சாப்பிட்டு விட்டு பஸ்சில் வந்து உள்ளனர். அவர்களிடம் இருந்த பணத்தை பஸ்சுக்காகவும், மனு எழுதுவதற்காகவும் செலவு செய்து விட்டதாகவும், மதியம் வெளியில் சாப்பிடாமல் மீண்டும் வீட்டுக்கு சென்றுதான் சாப்பிட உள்ளோம் என்றும் தெரிவித்தனர். இதனால் மனு எழுதுவதற்கு பணம் பெறாமல் இலவசமாக எழுதி கொடுக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று மனு எழுதும் பெண்ணை சந்தித்தேன். அவர் மனு எழுதுவதால் ரூ.500 முதல் ரூ.700 வரை கிடைக்கிறது. இதுதான் எங்கள் வாழ்வாதாரம் என்றும் தெரிவித்தார்.

இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில், மனு எழுதுவதால், அவர்களுக்கு வழக்கமாக கிடைக்க கூடிய தொகையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். அதே நேரத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். தற்போது வெளியில் அமர்ந்து மனு எழுதுபவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்குள் அமர்ந்து இலவசமாக மனு எழுதி கொடுக்க உள்ளனர்.

இவர்கள் முழுமையாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story