தூத்துக்குடி மாநகராட்சியில்கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும்
தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விண்ணப்பிக்கலாம்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு, கழிவு மேலாண்மை கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத்தை மேம்படுத்த கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், மலக்கசடு, கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளன. அதன்படி கழிவுநீர் அகற்றும் வாகன ஓட்டுனர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இயக்கப்படும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மேற்படி பணிக்கான அனுமதி பெற தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாநகராட்சி அலுவலக வேலை நேரங்களில் பொது சுகாதாரப்பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
நடவடிக்கை
இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அடிப்படையில் உரிய அனுமதி வழங்கப்படும். கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயக்குவது கண்டறியப்பட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் கோர்ட்டு மூலம் வழக்குபதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.