தூத்துக்குடி அரசு அலுவலகங்களில்நல்லிணக்கநாள் உறுதி மொழி ஏற்பு
தூத்துக்குடி அரசு அலுவலகங்களில் நல்லிணக்கநாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில், அரசு அலுவலர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனர்.
நல்லிணக்க நாள்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்று வருகின்றனர். அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்றனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சிரஸ்தார்கள் இளங்கோ, ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் ராஜாராம் தலைமையில், என்ஜினீயர் பாஸ்கர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள் நல்லிணக்கநாள் உறுதி மொழி ஏற்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்றனர். அப்போது 'நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதியளிக்கிறேன்" என்று உறுதிமொழி ஏற்றனர்.