தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு:மேயர்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு:மேயர்
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு உரிய இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக அதனை மீட்பதற்காக நடவடிக்கைகளில் மேயர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மீட்கப்படும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமையை உருவாக்குதல் மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கான திட்டங்களை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாளையங்கோட்டை ரோட்டில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்பு சுமார் 93 செண்ட் மாநகராட்சி நிலம் உள்ளது.

இந்த நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.25 கோடி சொத்து மீட்பு

இது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை ரூ.25 கோடி மதிப்பிலான பல ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நீர்வழித்தடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 93 செண்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகின்றன. மேலும் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இதனால் இந்த இடத்தை கையகப்படுத்தி, பஸ்கள் கல்லூரி வாசல் முன்பு வரை உள்பக்கமாக வந்து ஆட்களை ஏற்றி, இறக்கி செல்லும் வகையில் சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதனால் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

தார்சாலை பணி ஆய்வு

மேலும், தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சண்முகபுரம் பகுதியில் நடந்து வரும் புதிய பேவர் பிளாக் சாலை பணி, புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணி, முத்தம்மாள் காலனி 5-வது தெருவில் நடைபெற்ற புதிய தார் சாலை பணிகள், வி.எம்.எஸ்.நகரில் புதிய தார்சாலை பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story