தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்பாதாள சாக்கடை திட்டத்தில்1.20 லட்சம் இணைப்புகள் வழங்கப்படும்:மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 1.20 லட்சம் இணைப்புகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 1.20 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக, மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று காலையில் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ.87 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறுவாழ்வு மையம்
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சியில் மது இல்லாத வார்டு உருவாக்குவதற்காக 51-வது வார்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மதுவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வார்டு தோறும் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் நகரசபை தலைவர் என்.பெரியசாமி ஆகியோரின் உருவச்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. ஒரு மாதமாக குப்பை அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. குப்பை நகரமாக மாறி உள்ளது.. ஆகையால் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யர்காலனி பகுதியில் தார்சாலை, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். அத்திமரப்பட்டி பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
பாதாள சாக்கடை இணைப்பு
இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் பெறப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, அதனை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். பாதாள சாக்கடை திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், மாநகராட்சியின் ஆன்லைன் புகார் தளத்தில் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மழைக்காலத்தில் திரேஸ்புரம் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய பூங்காக்கள்பராமரிக்கப்படும். மாநகராட்சி சார்பில் கதிர்வேல்நகர் பகுதியில் 3½ ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் மற்றும் கபடி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும், என்று கூறினார்.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.