தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


தினத்தந்தி 22 Sept 2022 11:00 AM IST (Updated: 22 Sept 2022 11:00 AM IST)
t-max-icont-min-icon

தினமும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி

தினமும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போக்குவரத்து நெருக்கடி

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் அண்ணாநகர், பிரையண்ட்நகர் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் வி.வி.டி. சிக்னல் அமைந்து உள்ளது. இந்த சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரியும் இருக்கிறது.

இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள்.

பாலம் அமைக்கும் பணி

இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதுவரை பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, வி.வி.டி.சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆனாலும், பணிகள் தொடங்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, வி.வி.டி. சிக்னல் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த முத்து கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகரில் வாகனங்கள் பெருகி உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. வி.வி.டி.சிக்னல் முக்கிய சந்திப்பாக விளங்கி வருகிறது. இந்த சிக்னல் பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு கூட போதுமான இடம் இல்லாத நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதிய நேரங்களில் குறைந்தபட்சம் சராசரியாக வாகன ஓட்டிகள் 2 முறை சிக்னல்கள் விழும் வரை காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாலம் அமைந்தால் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆஸ்பத்திரி

தூத்துக்குடி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் சங்கர்:-

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதில் வி.வி.டி.சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் மாவட்டத்தின் பெரிய அரசு ஆஸ்பத்திரி அமைந்து உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

அதே நேரத்தில் ஆம்புலன்சுகள் ஆஸ்பத்திரிக்குள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது. இதனால் நோயாளிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

விரைந்து அமைக்க வேண்டும்

போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் உள்ளது. தற்போது உள்ள சிக்னல் பகுதியில் பிரீ லெப்ட் வசதி இல்லை. இதனால் அதிக அளவில் வாகனங்கள் சிக்னலில் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால் மக்களின் அடிப்படை தேவை மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகளை கருத்தில் கொண்டு, இந்த வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story