தூத்துக்குடியில் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்பட்ட முத்துநகர் பூங்கா திறப்பு
தூத்துக்குடியில் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்பட்ட முத்துநகர் பூங்காவை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ.4 கோடியே 45 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்காவை கனிமொழி எம்.பி நேற்று மாலையில் திறந்து வைத்தார்.
முத்துநகர் பூங்கா
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் விரிவாக்கம், பூங்காக்கள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு பீச் ரோட்டில் உள்ள முத்துநகர் கடற்கரை பூங்கா ரூ.4 கோடியே 45 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பூங்காவில் நடைபாதை, புல்வெளி விளையாட்டு திடல், ஒரே கல்லில் செதுக்கிய முத்து சிற்பம், திறந்த வெளி மேடை, கடற்கரை கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், ஸ்கேட்டிங் மைதானம், கழிப்பறை வசதி, இருசக்கர, 4 சக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
திறப்பு விழா
இந்த பூங்கா சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணைமேயர் ஜெனிட்டா, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்து ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டார். பூங்காவில் மரக்கன்றுகளையும் நட்டி பேசினார்.
அப்போது, மாற்றுத்திறனாளிகள் கடலில் காலை நனைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் கனவை இந்த கடற்கரை பூங்காவில் நிறைவேற்றி தந்து இருக்கிறார்கள். நம் நகரத்தை நாம் சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பூங்காவை குப்பைகள் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் நினைத்தால் நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இந்த பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்கில் வாரம் தோறும் இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். நம் ஊரில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த மேடை அமைய வேண்டும் என்று கூறினார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, இந்த கடற்கரை பூங்கா முழுவதும் சீரமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவை சுகாதாரமாக பராமரிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தூத்துக்குடி மாநகர செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், மின் கண்காணிப்பாளர் மாரிமுத்து, உதவி ஆணையர் (பொறுப்பு) சேகர், உதவி பொறியாளர் பிரின்ஸ், சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.