திருச்செந்தூர் பகுதியில் ரூ.82 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பகுதியில் ரூ.82 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகுதியில் ரூ.82லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நலத்திட்டங்கள்

திருச்செந்தூர் யூனியன் மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5½ லட்சம் மதிப்பில் புதிதாக பயணியர் நிழற்குடையும், கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.20½ லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சுனாமி நகரில் ரூ.18.98 லட்சம் மதிப்பிலும், குமாரபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிதாக சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் ரூ.82 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டுள்ளது.

திறப்பு விழா

இதன் திறப்புவிழா நேற்று அந்தந்த பகுதிகளில் நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மொத்தம் ரூ.64.98 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, பள்ளி வகுப்பறை, சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றையும், தார் சாலையையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், நகராட்சி ஆணையாளர் கண்மணி, யூனியன் ஆணையர் அன்றோ, கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி, ஊர் தலைவர் முத்துகுமார், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து துணை தலைவர் முருகன்,

திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, நகர திமுக செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கை அங்கமங்கலம் கிராமத்தில் நடத்தின.

இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை உரையாற்றினார். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

விவசாயிகளுக்கு விருது

இந்த முகாமில் ஆடு, மாடுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம் செய்தல், ஆடுகளுக்கு அடைப்பான் நோய் சிகிச்சை, தடுப்பூசி போடுதல், செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுதல், குடல்புழு நீக்கம் செய்தலும் நடைபெற்றது. சிறந்த கிடேரி கன்றுகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசும், ஆடு, மாடுகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகளுக்கு விருதும் வழங்கப்பட்டது.

மேலும் பரமன்குறிச்சி, போலையார்புரம் கிராமங்களில் புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார். முக்காணி, ராமானுஜம் புதூர், செக்காரக்குடி மற்றும் நடுவக்குறிச்சி கிராமங்களில் கால்நடை கிளை நிலையங்கள் அமைக்க திறப்பு விழா பெயர் பலகையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இதில் சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார் நன்றி கூறினார்


Next Story