திருச்செந்தூரில், ஆட்டோக்களில்மீட்டர் பொருத்த நடவடிக்கை:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
திருச்செந்தூரில், ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார்களை தொடர்ந்து, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஆவணி திருவிழா மற்றும் ரூ.300 கோடியில் நடந்து வரும் பெருந்திட்ட வளாக பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் நடந்தது. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன், உதவி கலெக்டர் குருச்சந்திரன், போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், கோவில் இணை ஆணையர் கார்த்திக், நகராட்சி தலைவர் சிவஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி, நகராட்சி ஆணையாளர் கண்மணி, தாசில்தார் வாமனன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் பெருந்திட்ட வளாக பணிகளை அவர் ஆய்வு ெசய்தார்.
ஆவணி திருவிழா
முன்னதாக அவர் கூறுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா வரும் 4-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது. இதில் சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி மற்றும் தேரோட்டம் நடக்கும் நாட்களில் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். கடற்கரையில் 20 மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
திருச்செந்தூர் நகருக்கு பொன்னன்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டம், குரங்கு குடிநீர் திட்டம், கானம் குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும். நகருக்கு வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டு கோவிலுக்கு சர்குலர் பஸ் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம்
நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பொதுமக்கள் மற்றும் வௌியூர்களில் இருந்தும் பக்தர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில் வளாகத்தில் ஹெச்.சி.எல். நிறுவனம் மூலம் ரூ.200 கோடியிலும், அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடியிலும் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைவு படுத்தி வருகிறோம்.
குடிநீர் லாரிகளுக்கு தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீருக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்த வேண்டும். திருச்செந்தூர் அருகே எல்லப்பநாயக்கன் குளத்தில் இருந்து வியாபார ரீதியாக குடிநீரை எடுத்து செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்கப்படும், என்றார்.