திருச்செந்தூர் நகராட்சி பகுதியில்பாதாள சாக்கடை திட்டம்2 மாதத்தில் நிறைவடையும்:அமைச்சர் கே.என்.நேரு
திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 2 மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஆய்வு
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர். கோவிலில் அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அமைச்சர்கள் திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.
பாதாள சாக்கடை திட்டம்
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 4ஆயிரத்து 200 இணைப்புகள் வழங்க வேண்டிய நிலையில், இதுவரை 300 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. முழு இணைப்புகளும் வழங்கினால் மட்டுமே திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 2 மாதங்களில் அனைத்து இணைப்புகளும் வழங்கப்பட்டு பாதாள சாக்கடை திட்ட பணி செயல்பாட்டுக்கு வரும். அப்போது பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, மறுகால் ஓடையில் விடப்படும். எல்லப்பநாயக்கன்குளம் மற்றும் ஆவுடையார்குளம் ஆகிய 2 குளங்களையும் சீரமைக்கப்படும். நகராட்சிப்பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அதிகரிக்கப்படும்.
பகத்சிங் பஸ்நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக எரிதகன மேடை இடமாற்றம் செய்யப்படும். நகரில் கூடுதலாக குடிநீர் வழங்குவது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் விரைவில் ஆய்வு நடத்த உள்ளதாக, தெரிவித்தார்.
காயல்பட்டினம்
பின்னர் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு அமைச்சர்கள் சென்றனர். அந்த நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து நகரசபை தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முகமது, ஆணையாளர் குமார் சிங் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்ற அமைச்சர்களை தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், பேருராட்சி மன்ற நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் வரவேற்றனர். அலுவலகத்தில் அமைச்சர்கள் நகர பஞ்சாயத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து நகர பஞ்சாயத்து பணியில் தூய்மை பணிக்காக தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள 15 பேட்டரி ஆட்டோக்களை தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர் நேரு ஒப்படைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, எம்.எல்.ஏ. எம்.சி.சண்முகையா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மண்டல இயக்குனர் விஜயலெட்சுமி, மண்டல பொறியாளர் இளங்கோவன், குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் விஸ்வலிங்கம், நிர்வாக பொறியாளர் லதா சாண்ட்லின், உதவி நிர்வாகப் பொறியாளர் கருப்பண்ணசாமி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சித்தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், நகராட்சி ஆணையர் வேலவன், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மேலஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகரசபை துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, கவுன்சிலர்கள், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பி என்ற துரை காக்கா, பொதுச் செயலாளர் நவாஸ், செயலாளர் வாவு.சம்சுதீன், நகர பஞ்சாயத்து உதவி செயற்பொறியாளர் மாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.