திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில்சிறு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சிறு வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் மீண்டும் வியாபாரம் செய்வதற்கு அனுமதி அளிக்க கோரி நேற்று சிறு வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிறு வியாபாரிகள் வெளியேற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து போலீசார் துணையுடன் சிறு வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
முற்றுகை போராட்டம்
இதை தொடர்ந்து நேற்று அவரது தலைமையில் சிறு வியாபாரிகள் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், இந்து முன்னணி நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று உதவி கலெக்டர் புகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், கோவிலில் சிறு வியாபாரிகள் வயிற்று பிழைப்புக்காக வியாபாரம் செய்து வருகின்றனர். அதனால் அனைத்து வியாபாரிகளின் குடும்ப நலன் கருதி மீண்டும் கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்து மகா சபா
கோவில் வளாகத்தில் இருந்து சிறு வியாபாரிகள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் அகில பாரத இந்து மகா சபா நகர தலைவர் மாயாண்டி தலைமையில் சிறு வியாபாரிகள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் புகாரி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மக்கள் தொடர்பு அலுவலர் சிவநாதன், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளர் அய்யப்பன், மண்டல தலைவர் சுந்தரவேல், நகர தலைவர் மாயாண்டி, தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க நகர செயலாளர் பிரித்திவி ராஜன் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகிற 26-ந் தேதி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகிறார். அவரிடம் கோரிக்கை மனு கொடுக்குமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுருத்தப்பட்டது.