திருச்செந்தூர் கோவில் வளாகத்தில்பக்தர்கள் வசதிக்கு 169 இலவச சுகாதார வளாகம்
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்கு 169 இலவச சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் பெண்களுக்கு 108 சுகாதார வளாகமும், ஆண்களுக்கு 61 சுகாதார வளாகமும் என மொத்தம் 169 சுகாதார வளாகங்கள் உள்ளன. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 5 குளியலறைகள் என 10 இலவச குளியலறைகள் மற்றும் பெண்களுக்கு 25 குளியல் தொட்டிகளும், ஆண்களுக்கு 4 குளியல் தொட்டிகளும் என மொத்தம் 29 இலவச குளியல் தொட்டிகள் இருக்கின்றன. அதேபோல் 24 சிறுநீர் கழிப்பிடம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் 8 வெஸ்டர்ன் டைப் சுகாதார வளாகங்கள் உள்ளன. மேலும் 14 நடமாடும் சுகாதார வளாகங்களும் இயங்கி வருகின்றன.
மேலும், கோவில் வளாகத்தில் ஆவணி பொது சுகாதார வளாகத்தில் ஆண்களுக்கான 30 கழிப்பறைகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் 30 நடமாடும் சுகாதார வளாகங்கள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டு உள்ளது.