திருச்செந்தூர் கோவிலில்நாகலாந்து கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் நேற்று காலையில் வந்தார். அவர், கோவிலில் மூலவருக்கு நடந்த உச்சிகால அபிஷேகத்தை தரிசித்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் படித்தவர்கள் அதிகமாக இருக்கும் தொகுதியில்கூட குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகிறது. ஆனால் நாகலாந்தில் 84 சதவீத மக்கள் வாக்களித்தனர். அங்குள்ள மக்களிடம் வேட்டு மீது நம்பிக்கை குறைந்து, ஓட்டு மீது நம்பிக்கை வந்துள்ளது. அவர்கள் அமைதியை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். சில தலைமறைவு இயக்க அமைப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களும் ஆயுதம் ஏந்தி போராட விரும்பவில்லை. ஜனநாயகத்தின் மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தை விட நாகலாந்தில் முன்னேற்றம் குறைவுதான்.
எனினும் அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் நாகலாந்து முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நாகலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு கோவில் இணை ஆணையர் கார்த்திக் 'திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு' புத்தகத்தை வழங்கி வரவேற்றார். சண்முகவிலாச மண்டபத்தில் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.