திருச்செந்தூர் கோவிலில் நாட்குறிப்பு புத்தகம் வெளியீடு
திருச்செந்தூர் கோவிலில் நாட்குறிப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூஜை காலங்கள், மாதாந்திர, வருடாந்திர விழா காலங்கள் மற்றும் கோவிலை பற்றிய பொது விபரங்கள் அடங்கிய இலவச பொது நாட்குறிப்பு புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கலந்து கொண்டு பொது விபர நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டார்.
மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சேலைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் செந்தில் முருகன், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.