திருச்செந்தூரில் தடைைய மீறி ஊர்வலம் செல்லமுயன்ற எம்.எல்.ஏ. உள்பட பா.ஜ.க.வினர் 221 பேர் கைது
திருச்செந்தூரில் தடைைய மீறி ஊர்வலம் செல்ல முயன்ற எம்.எல்.ஏ. உள்பட பா.ஜ.க.வினர் 221 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற எம்.எல்.ஏ. உள்பட பா.ஜ.க.வினர் 221 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஓபிசி அணி மாநில துணை தலைவர் விவேகம் ரமேஷ், வர்த்தக அணி மாநில செயலாளர் சத்தியசீலன், திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
221 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், அங்கிருந்து இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு தடையை மீறி அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதை தொடர்ந்து ஊர்வலமாக செல்ல முயன்ற 45 பெண்கள் உள்பட 221 பா.ஜ.க.வினரை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த்ராஜ், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.