திருவாரூரில், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு


திருவாரூரில், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு
x

திருவாரூரில், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

திருவாரூர்

உற்பத்தி குறைந்ததால் திருவாரூரில் கோழி இறைச்சி விலை அதிகரித்துள்ளது. இதனால் 1 கிலோ ரூ.290-க்கு விற்பனையானது.

இறைச்சி விற்பனை

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் சமைத்தாலும் விதவிதமான அசைவ உணவுகளை ஓட்டல்களில் இருந்து அன்றாடம் வீட்டிற்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு அசைவ பிரியர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஓய்வு நேரத்தில், விடுமுறை நாளில் மட்டுமே அசைவம் சாப்பிட்ட நிலை இப்போது மாறிவிட்டது.முன்பெல்லாம் அசைவ உணவுகளுக்காகவே நாட்டுக்கோழிகளை வீட்டில் வளர்த்தவர்களும் உண்டு.

பொதுவாக விடுமுறை காலங்களில் இறைச்சி விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக உள்ளதால் கோழி இறைச்சியின் பயன்பாடே தற்போது மிகவும் அதிகமாக உள்ளது.

விலை அதிகரிப்பு

சமைப்பது எளிது, சுவை போன்ற காரணங்களால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதுவும் நாட்டுக்கோழிகளை விட பிராய்லர் கோழி இறைச்சியை தான் அதிகம் பேர் விரும்பி வாங்குகின்றனர். கோழி இறைச்சியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் விலையும் அதிகரித்து வருகிறது. திருவாரூர் நேதாஜி சாலை, துர்காலயா சாலை, விளமல் உள்ளிட்ட பல பகுதிகளில் கோழி இறைச்சி கடைகள் உள்ளன. கோழி இறைச்சி வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

கடந்த வாரம் வரை 1 கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ.180 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று ஒரு கிலோவுக்கு ரூ.50 வரை விலை உயர்ந்து 1 கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ.250 முதல் ரூ.290 வரை விற்பனை செய்யப்பட்டது. உயிர் கோழி ரூ.190 வரை விற்பனை செய்யப்பட்டது.

மழை தொடங்கினால் விலை குறையும்

நாட்டுக்கோழியின் விலை அதிகமாக இருப்பதால் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்கி வந்த நிலையில் தற்போது அதன் விலையும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வெயில் காலத்தில் உற்பத்தி குறைந்து, கோழி இறைச்சி விலை அதிகரிப்பது வெயில் மிகவும் அதிகம் என்பதால், விலை அதிகரித்துள்ளது. இன்னும், 15 நாட்கள் வரை விலையில் மாற்றமிருக்காது. மழை தொடங்கினால் விலை குறையும் என்றனர்.


Next Story