டி.என்.பாளையத்தில்மதுபாட்டில்களை மொபட்டில் விற்க கொண்டுசென்றவர் விபத்தில் சிக்கினார்


டி.என்.பாளையத்தில்மதுபாட்டில்களை மொபட்டில் விற்க கொண்டுசென்றவர் விபத்தில் சிக்கினார்
x

விபத்தில் சிக்கினார்

ஈரோடு

டி.என்.பாளையத்தில் மதுபாட்டில்களை மொபட்டில் விற்க கொண்டு சென்றவர் விபத்தில் சிக்கினார்.

மொபட் விபத்தில் சிக்கியது

சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் மொபட்டில் மதுபான பாட்டில்களை வைத்து கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தார். டி.என்.பாளையம் தனியார் பள்ளிக்கூட வளைவில் மொபட்டை அவர் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த மொபட் பள்ளிக்கூட மதில் சுவரில் மோதியது. இந்த விபத்தில் மொபட்டுடன் அந்த நபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் மொபட்டில் வைத்திருந்த சில மதுபாட்டில்கள் கீழே உடைந்து உடைந்து நொறுங்கின.

இதை பார்த்த அந்த வழியாக வந்த சிலர் உடனே அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பறிமுதல்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் விபத்துக்குள்ளான அந்த நபர் மொபட்டில் வைத்திருந்த 40 மதுபான பாட்டில்கள் மற்றும் அவர் ஓட்டி வந்த மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் அவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து பங்களாப்புதூர் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்துக்குள்ளான அந்த நபர், டி.என்.பாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்த மணி (வயது39) என்பதும், இவர் 50 மதுபாட்டில்களை விற்பனைக்காக மொபட்டில் கொண்டு சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story