திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக தா.பேட்டையில் 22 மில்லி மீட்டர் மழை
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக தா.பேட்டையில் 22 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக தா.பேட்டையில் 22 மில்லி மீட்டர் மழை பதிவானது.
அக்னி நட்சத்திரம்
கோடையின் உச்சம் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருச்சி மற்றும் புறநகர் சுற்றுப்பகுதியில் கடந்த 5 நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் லேசான சாரல் மழையாகவும், சில இடங்களில் பலத்த மழையாகவும் பெய்து வந்தது.
நேற்று காலை முதலே வெயில் தெரியாத அளவுக்கு பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் வெயில் அடித்தாலும் கத்தரி வெயில் போல் சுட்டெரிக்கவில்லை.
பலத்த மழை
இந்தநிலையில் நேற்று மாலை மாநகரின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதியிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருச்சி மத்திய பஸ்நிலையம், சத்திரம் பஸ்நிலையம், உறையூர், தில்லைநகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம், திருவானைகாவல், கருமண்டபம், பெரியமிளகுபாறை, புத்தூர், புறநகர் பகுதிகளான சோமரசம்பேட்டை, முக்கொம்பு, மண்ணச்சநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் பெய்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
மழை அளவு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கல்லக்குடி- 2.4, லால்குடி- 6.2, நந்தியாறு - 7.2, புள்ளம்பாடி - 1.6, தேவி மங்கலம் - 1.4, சமயபுரம்- 11, வாத்தலை - 12, முசிறி - 16, தா.பேட்டை- 22, நாவலூர் கொட்டபட்டு - 6.4, துவாக்குடி- 6, கொப்பம்பட்டி - 5, தென்பரநாடு - 1, பொன்மலை - 6.4, திருச்சி ஏர்போர்ட் - 7.8, திருச்சி ஜங்ஷன் - 5.2, திருச்சி டவுன் - 9 ஆகும். மாவட்டத்தில் அதிகபட்சமாக தா.பேட்டையில் 22 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.