தூத்துக்குடி கோர்ட்டில், இங்கிலாந்துகாரர் கைது வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது


தூத்துக்குடி கோர்ட்டில், இங்கிலாந்துகாரர் கைது வழக்கில்   சாட்சி விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரர் ஜோனதன் தோர்ன் கைதான வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரர் ஜோனதன் தோர்ன் கைதான வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நேற்று தொடங்கியது.

கடத்தல்காரர்

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்று உள்ளார். இது குறித்து கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் தொடர்ந்து ஜெயிலில் உள்ளார்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கடந்த 3-ந் தேதி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட் குபேரசுந்தர் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். தொடர்ந்து குற்றப்பத்திரிகை நகல் ஜோனதன் தோர்னுக்கு வழங்கப்பட்டது. அப்போது, ஜோனதன் தோர்ன் ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை நகல் வேண்டும் என்று கேட்டதால், ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 11-ந் தேதி ஜோனதன் தோர்னிடம் வழங்கப்பட்டது.

விசாரணை தொடங்கியது

இதைத் தொடர்ந்து வழக்கு நேற்று மீண்டும் மாஜிஸ்திரேட்டு குபேரசுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக ஜோனதன் தோர்ன் சென்னையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 35 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சாட்சிகளிடம் விசாரணை நேற்று தொடங்கியது. நேற்று கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story