தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த ரூ.26¼ கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தூத்துக்குடி மாவட்டத்தில்   அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த ரூ.26¼ கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:05+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த ரூ.26¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த ரூ.26¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

திறப்பு விழா

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், திருச்செந்தூர் அருகே காயாமொழி, ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ரூ.15 லட்சத்தில் சித்த மருத்துவ பிரிவு, சாத்தான்குளத்தில் தலா ரூ.25 லட்சத்தில் 2 துணை சுகாதார நிலையங்கள், மாப்பிள்ளையூரணியில் ரூ.25 லட்சத்தில் செவிலியர் குடியிருப்புகள் என மொத்தம் ரூ.1.05 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா, காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் வரவேற்று பேசினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டுகளை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த...

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியை மேம்படுத்துதல், மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.26 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.13 லட்சத்தில் ரத்த சுத்திகரிப்பு எந்திரம், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 லட்சத்தில் பச்சிளங்குழந்தைகள் செவித்திறன் கண்டறியும் ஒலிபுகா அறை மற்றும் நவீன எந்திரம் அமைக்கப்பட உள்ளது. மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.10.5 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 துணை சுகாதார நிலையத்திற்கு ரூ.7.14 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. காயல்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தபட உள்ளது. 31 துணை சுகாதார நிலையங்கள் நல்வாழ்வு மையங்களாக மாற்றப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கலைவாணி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் சுந்தரலிங்கம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி, காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் மெர்வினோ தேவதாசன், சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன்,

திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரன், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பொன் இசக்கி நன்றி கூறினார்.


Next Story