தூத்துக்குடி மாவட்டத்தில்விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள்தரமான விதை உற்பத்தி செய்ய வேண்டும்:வேளாண் அதிகாரிகள் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள் தரமான விதை உற்பத்தி செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து நெல்லை விதை பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா, தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சேக்நூஹ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விதைகள்
வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் விதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. விதைகள் நல்ல தரத்துடன் இருந்தால் மட்டுமே, பயிர்கள் மற்ற அனைத்து இடுபொருட்களையும் ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் வளர்ந்து அதிகரித்த விளைச்சலை அளிக்கும். தரமான விதை உற்பத்திக்கு விதைப்பிலிருந்து பயிரின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் தக்க தொழில் நுட்பங்களை கையாள்வது அவசியமாகிறது.
விதை உற்பத்திக்கென தேர்வு செய்யப்பட்ட வயலை நன்கு உழுது சமன் செய்து விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்கவேண்டும். இது தவிர தேர்வு செய்யும் நிலத்தில் முன் பருவத்தில் பிற ரகப்பயிர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர நடவின்முன், விதை நிலத்தில் அந்தந்த பயிர்களுக்கு தேவையான பயிர் விலகு தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் பயிரின் இனத்தூய்மை பாதுகாக்கப்படும்.
கலவன் அகற்றுதல்
விதைப்பயிர் எனில் எல்லா செடிகளும் ஒரே மாதிரியான ஒருமித்த குணாதிசயங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். விதை உற்பத்தியின் போது விதைப் பயிரின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்ட பயிர்கள், பிற ரக பயிர்கள் ஆகியவை விதைப்பயிரின் இனத் தூய்மையைப் பாதிக்கும். இதனால் அவற்றை பயிரின் பல்வேறு நிலைகளான பூக்கும் பருவத்திற்கு முன்பும், பூக்கும் பருவத்திலும், காய்பிடிப்பின் போதும் மற்றும் அறுவடைக்கு முன்பும் குட்டையான செடிகள், உயரமான செடிகள், மாறுபட்ட இலை, தண்டு, பூக்களின் நிறம் கொண்ட செடிகள் மற்றும் காய்களின் தன்மையில் வேறுபட்டிருக்கும் செடிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். இதனால் தரமான இனத்தூய்மையுடன் கூடிய விதைகளை உற்பத்தி செய்யலாம்.
அறுவடை
விதைப் பயிரை முதிர்ச்சியடைந்த தருணத்தில், அறுவடை செய்தல் வேண்டும். ஏனெனில், அத்தருணத்தில் விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியம் அதிக அளவில் இருக்கும். விதையின் நிறம் மற்றும் ஈரப்பதத்தை கணக்கில் கொண்டு அறுவடைக்கு ஏற்ற தருணத்தை நிர்ணயம் செய்யலாம். அறுவடை செய்த விதைகளை காலை மற்றம் மாலை வேலைகளில் மட்டும் அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும். நெல்லுக்கு 13 சதவீதம் சோளம், கம்பு மக்காச்சோளம் 12 சதவீதம் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களுக்கு 9 சதவீதமும் இருக்குமாறு உலர்த்தி பின் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
விதையின் தரத்தை உறுதி செய்ய விதை மாதிரிகளை எடுத்து விதை பரிசோதனை செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விதை உற்பத்தியாளர்கள் விதை விற்பனையாளர்கள் விவசாயிகள் தங்களிடத்pலுள்ள விதைகளை தூத்துக்குடி எட்டயபுரம் சாலை, ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்திற்கு விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 கட்டணத்துடன் அனுப்பி, விதை பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.