தூத்துக்குடி மாவட்டத்தில்ஆவின் பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகத்தில் பணி நியமனம் பெற்றவர்கள் முறையாக பணி நியமனத்திற்கு வந்துள்ளார்களா, இதில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலும் (ஆவின்) பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடந்த ஆய்வில், போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆவின் பொதுமேலாளர் ராஜாகுமார் விதிமுறைகளுக்கு முரணாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கருதப்படும் 2 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவும், மற்றும் அப்போதைய ஆவின் பணியாளர்கள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார். இதில் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ள 2 பேரும் அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.