தூத்துக்குடி மாவட்டத்தில்போதை பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: போலீஸ்சூப்பிரண்டு பாலாஜிசரவணன் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைபொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடனான மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கோர்ட்டு அலுவல்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, மாவட்டத்தில் போதைப்பொருட்களை கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யவேண்டும். இப்பொருட்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகள் நடமாட்டத்தையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, தூத்துக்குடி 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற உதவி வக்கீல் ஜானகி, தூத்துக்குடி 3-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற உதவி வக்கீல் கண்ணன், திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற அரசு உதவி வக்கீல் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் 1-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற உதவி வக்கீல் செய்யதுஅலி பாத்திமா, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.