தூத்துக்குடியில் நடப்பு ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 248 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில், இதுவரை ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 248 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில், இதுவரை ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 248 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடை விற்பனையாளர்கள், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஒப்பந்தம் பெற்ற தனியார் அரவை மில் உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன் (மதுரை), சுரேஷ்குமார் (விருதுநகர்), தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல்காசீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா பேசும் போது, விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கும் நெல்லை கொண்டு செல்லும் போது, வாகனத்தில் உரிய ஆவணங்கள், அரசால் வழங்கப்பட்ட போக்குவரத்து படிவத்தை அரவை வில் உரிமையாளர்கள் வைத்து இருக்க வேண்டும், நெல்லை அரைத்து அரிசியாக திரும்ப ஒப்படைக்கும் போது, முறையாக ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
248 பேர் கைது
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 192.941 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 204 பேர்கைது செய்யப்பட்டனர். 91 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 234.564 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரேஷன் அரிசியை கடத்தியதாக 248 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 பேர் மீது கள்ளச்சந்தைக்காரர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ரேஷன் அரிசியை பதுக்கும், கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி, பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் மாரியப்பன் மற்றும் ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள், அரவை மில் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.