தூத்துக்குடியில் ஆசிரியர் வேலை தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி: தம்பதி் கைது
தூத்துக்குடியில் ஆசிரியர் வேலை தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த தம்பதி் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஆசிரியர் வேலை தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் வேலை
தூத்துக்குடி ராஜபாளையத்தை சேர்ந்தவர் மைக்கேல் அண்டோ ஜீனியஸ். இவருடைய மனைவி மரிய சில்வியா (வயது 27). இவரிடம், தூத்துக்குடி இன்னாசியர்புரத்தில் உள்ள நீம் பவுண்டேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் லூயிஸ் ராஜ்குமார் (42) மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அவரது மனைவி கவிதா (32) ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதியோடு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுக்க ஆசிரியர்களை நியமித்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்ய ரூ.50 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு முன்பணம் செலுத்தினால் மாதம் தோறும் ரூ.15 ஆயிரம் சம்பளம் தருவதாகவும், 15 ஆண்டுகள் வேலை செய்யலாம் என்றும், அரசு வேலை கிடைத்து சென்றாலோ அல்லது இடையில் வேலையை விட்டு நின்றுவிட்டாலோ முன்பணத்தை திருப்பித் தந்து விடுவதாக ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர்.
கைது
இதனை நம்பிய மரிய சில்வியா ரூ.50 ஆயிரம் கொடுத்து உள்ளார். அதன்பிறகு அரசின் எவ்வித வழிகாட்டு முறைகளும் இல்லாமல், முறைகேடாக சிலுவைப்பட்டி, பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமித்து உள்ளனர். ஆனால் 4 மாதங்களாக எந்தவித சம்பளமும் வழங்கப்படவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மரியசில்வியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லூயிஸ் ராஜ்குமார், கவிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.