தூத்துக்குடி கடலில் சங்கு வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் செந்தில்ராஜ்


தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கடலில் சங்கு வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கடலில் சங்கு வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

மீனவர் குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர்கள் விஜயராகவன், அன்றோ பிரின்சி வைலா, மீன்வளத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கடலில் மீன்பிடிக்கும் போது, காணாமல் போன 6 மீனவர்களின் குடும்பங்களுக்கு தினப்படி ரூ.250 வீதம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் உதவித் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூண்டில் வளைவு

கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:-

கடலில் சங்கு வளம் குறைந்துவிட்டது. முன்பெல்லாம் ஒரு சங்குகுளி மீனவர் 100 சங்கு வரை எடுத்து வருவார். ஆனால் தற்போது 10 சங்குகள் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதுவும் உயிருள்ள சங்குகள் கிடைப்பதில்லை. இறந்த சங்குகள் தான் கிடைக்கின்றன. மேலும், பவளப்பாறைகளும் அழிந்துவிட்டன. இவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்குகுளி மீனவர்கள் குறித்த வயதுக்கு மேல் தொழில் செய்ய முடியாமல் ஓய்வு பெற்று விடுகின்றனர். அவ்வாறு ஓய்வு பெறும் சங்குகுளி மீனவர்களுக்கு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீன் வலைகளுக்கு தனியாக மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மருத்துவ முதலுதவி மையம், ஆம்புலன்ஸ் வசதி, போதுமான கழிப்பறை, குடிநீர் வசதி, ஓய்வுக்கூடம் அமைக்க வேண்டும். புன்னக்காயலில் தூண்டில் வளைவு அமைந்து உள்ள பகுதியில் நீரோட்டம் அதிகமாக உள்ளது. இதனால் படகுகள் விபத்தில் சிக்குகின்றன. இதனை மீண்டும் ஆய்வு செய்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்கும் திட்டத்தை எந்தநிலையிலும் கைவிட்டுவிடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இதேபோன்று கொம்புத்துறை, சிங்கித்துறை, அமலிநகர், ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

சங்கு வளம்

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

திரேஸ்புரம் மீன் இறங்கு தளத்தை ரூ.21 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டல சட்டம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அளித்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இனிகோநகர் கடற்கரையில் மீன்வளத்துறை செயற்பொறியாளர் மூலம் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி கடல் பகுதியில் குறைந்துபோன முத்துச்சிப்பி வளத்தை பாதுகாக்க சமீபத்தில் 5 லட்சம் சிப்பி குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. அதுபோல சங்கு வளத்தை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீனவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகள் அறிக்கை தர வேண்டும். தூண்டில் வளைவு அமைப்பதற்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அதிக நிதி ஒதுக்கீடும் பெற வேண்டும். இதனால் ஒவ்வொரு பகுதியாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் கவுரவ் குமார் (தூத்துக்குடி), புகாரி (திருச்செந்தூர்), மகாலட்சுமி (கோவில்பட்டி) மற்றும் அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story