தூத்துக்குடியில்10 கிலோ 'போலி' ஹெராயின் பறிமுதல்:தனிப்படை போலீசார் அதிரடி
தூத்துக்குடியில் 10 கிலோ ‘போலி’ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் 10 கிலோ போலி ஹெராயினை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை
தூத்துக்குடியில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சிப்காட் போலீஸ் ஏட்டு பென்சிங் தலைமையில் ஜெகதீஷ், பிரகாஷ், ஜான்சன், பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உள்ளார். இந்த தனிப்படையினர், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா ஆகியோர் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி எஸ்.எஸ்.மார்க்கெட் பகுதியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றிக் கொண்டு இருந்தாராம். உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவர் வைத்து இருந்த பையில் சீனி போன்ற பொருள் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த ரீகன் (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து தலா ஒரு கிலோ எடை கொண்ட 10 பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து பரிசோதித்தனர். அந்த பொருள் யூரியா உரம் போன்று இருந்தது.
போலி ஹெராயின்
இதனை தொடர்ந்து அந்த பொருளை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரீகன், யூரியா உரம் போன்ற பொருளை, போலியாக ஹெராயின் போதை பொருள் என்றும், ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய் என்றும் கூறி சிலரிடம் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட ரீகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.