தூத்துக்குடியில்காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
தூத்துக்குடியில் காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலியானார்.
தூத்துக்குடியில் காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
வைரஸ் காய்ச்சல்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா எச்.3.என்.2. என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சிறுமி பலி
இந்த நிலையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சேர்ந்த முனீசுவரன் மகள் மகாலட்சுமி (வயது 6), கடந்த சில நாட்களாக தொடர் இருமல், காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டாள். உடனே அவளை அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிறுமிக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியை அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இறந்த சிறுமியின் உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
டீன் விளக்கம்
இதுகுறித்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் கூறுகையில், ''கடந்த மாதம் 24-ந் தேதி உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மகாலட்சுமியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தோம்.
சிறுமிக்கு டெங்கு, கொரோனா பாதிப்புகள் இல்லை. எனினும் வேறு கிருமியின் தாக்கம் காரணமாக, அவளது உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் இறந்துள்ளார்'' என்றார்.
தூத்துக்குடியில் காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.