தூத்துக்குடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு எகிறியது


தூத்துக்குடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு எகிறியது
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு எகிறி விற்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கும், ஒரு கிலோ இஞ்சி ரூ.280-க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தக்காளி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. போதிய பருவமழை பெய்யாததால் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்யவில்லை. இதனால் காய்கறிகளின் தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளது. வடமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 700 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக வரும். ஆனால் நேற்று 150 பெட்டிகளில் மட்டுமே தக்காளி வந்து உள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. நேற்று தூத்துக்குடி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தக்காளியை சமையலில் பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர். அதற்கு பதிலாக புளி, மாங்காய், எலுமிச்சையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

விலை விவரம்

தூத்துக்குடியில் நேற்று ஒருகிலோ கத்திரிக்காய் ரூ.40-க்கும், பச்சை மிளகாய் 80-க்கும், உள்ளி ரூ.60 முதல் ரூ.90 வரையும், பீன்ஸ் ரூ.120-க்கும், கேரட் ரூ.80-க்கும், உருளைக்கிழங்கு ரூ.35-க்கும், வெண்டைக்காய் ரூ.50-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும், இஞ்சி ரூ.280-க்கும், பூண்டு ரூ.180-க்கும், குடை மிளகாய் ரூ.90-க்கும், நாட்டு பாகற்காய் ரூ.120-க்கும் விற்பனையானது. காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story