தூத்துக்குடியில் மகளிர் மேம்பாட்டு திட்டம் குறித்த விபரம் அறிய இலவச சேவை மையம்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடியில் மகளிர் மேம்பாட்டு திட்டம் குறித்த விபரம் அறிய இலவச சேவை மையம்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மகளிர் மேம்பாட்டு திட்டம் குறித்த விபரம் அறிய இலவச சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், தமிழக மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இலவச சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் மேம்பாட்டு திட்டங்கள்

தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்கள், திட்டம் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சேவை மையத்தில் 155330 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்குதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண் கருவிகளை வாடகைக்கு விடுதல் மற்றும் வாடகைக்கு பெறுதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.

தகவல் பெறலாம்

மேலும் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங்கள், தகுதிகள், பயிற்சியின்போது வழங்கப்படும் வசதிகள் ஆகியன குறித்தும் தகவல்கள் பெறலாம். எனவே இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இந்த இலவச சேவை மையத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story