தூத்துக்குடியில்போலீஸ் நிலையத்தில்வாலிபர் தீக்குளிப்பு
தூத்துக்குடியில் போலீஸ் நிலையத்தில் வாலிபர் தீக்குளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் போலீஸ் நிலைய வளாகத்தில் வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிரியாணி கடை
தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 32). இவர் தூத்துக்குடி 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலையில் இவரது அண்ணன் ஆவுடையப்பனின் மகன் கணேஷ் என்பவர் டி.ம்.பி. காலனியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று தகராறு செய்தாராம்.
இது குறித்து அங்கு இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தென்பாகம் போலீசார் அங்கிருந்த கணேசை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறிவிட்டு சென்று விட்டார்களாம்.
இது குறித்து அறிந்த முருகன், நேற்று இரவு ஒரு ஆட்டோவில் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு வந்து உள்ளார்.
தீக்குளிப்பு
அவர் போலீஸ் நிலைய நுழைவு வாயிலை கடந்து உள்ளே சென்ற உடன், தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீவைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தை நோக்கி ஓடி உள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சூர்யா, முருகனை தடுத்து நிறுத்தி, அங்கு இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த தீக்குளிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
------