தூத்துக்குடியில்ரூ.45 லட்சம் முந்திரி திருட்டு
தூத்துக்குடியில் ரூ.45 லட்சம் முந்திரி மூட்டைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடியில் ரூ.45 லட்சம் மதிப்பிலான முந்திரியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முந்திரி
தூத்துக்குடி அண்ணாநகர் சாந்திகாலனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 51). இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். அந்த தனியார் நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இருந்து 917 டன் முந்திரி இறக்குமதி செய்து உள்ளனர். இந்த முந்திரியை மீளவிட்டான், மடத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் சேமித்து வைத்து இருந்தனர்.
ரூ.45 லட்சம் மதிப்பு
இந்த நிலையில் குடோனில் வைத்து இருந்த முந்திரி மூட்டைகளை விற்பனைக்காக அனுப்பி வந்தனர். அதே நேரத்தில் அங்கு இருந்த முந்திரி மூட்டைகள் சிதறி கிடப்பதை பார்த்தனர். இதனால் முந்திரி மூட்டைகள் சரியாக உள்ளதா என்று மீண்டும் கணக்கிட்டு பார்த்தனர். அப்போது சுமார் 41.96 டன் முந்திரி மூட்டைகளை யாரோ மர்மநபர் திருடி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.45 லட்சம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கமலக்கண்ணன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து முந்திரி மூட்டைகளை திருடி சென்ற மர்மநபரை தேடிவருகிறார்.