தூத்துக்குடியில்தூய காற்று தின விழிப்புணர்வு மனித சங்கிலி
தூத்துக்குடியில் தூய காற்று தின விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
தேசிய தூய்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், உலக தூய காற்று தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் வாகன பிரசாரம் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மனிதசங்கிலி மற்றும் வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை மேயர் வழங்கினார். நிகழ்ச்சியில் தேசிய பசுமைப்படை மாணவர்கள், காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை வைத்து இருந்தனர். மேலும், மனித சங்கிலியாக கைகோர்த்தபடி நின்றனர்.
இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் (திட்டம்) ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.