தூத்துக்குடியில் தோணியில் இருந்து தவறி விழுந்த மீனவர் மீட்பு
தூத்துக்குடியில் தோணியில் இருந்து தவறி விழுந்த மீனவர் மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து 'சூசைராஜம்' என்னும் தோணி மாலத்தீவுக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இந்த தோணியில் 9 மீனவர்கள் இருந்தனர். தோணி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து சிறிது தூரம் சென்று புதிய துறைமுகம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது தோணியில் இருந்த மீனவர் அந்தோணிஜேம்ஸ் பிளாட்டோ என்பவர் எதிர்பாராத விதமாக தவறி கடலில் விழுந்தார்.
உடனடியாக மற்ற மீனவர்கள் புதிய துறைமுகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தொழில் பாதுகாப்பு படையினர் ரோந்து படகில் விரைந்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த அந்தோணி ஜேம்ஸ் பிளாட்டோவை மீட்டனர். பின்னர் அவரை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு மீட்டதரல் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.