தூத்துக்குடியில் பணியின் போது இறந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி


தூத்துக்குடியில்  பணியின் போது இறந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது இறந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு தூணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது இறந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு தூணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

வீரவணக்க நாள்

1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி லடாக் பகுதியில் ரோந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேரை சீன ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 01.09.21 முதல் 31.08.22 வரை வீரமரணம் அடைந்த 264 போலீசாரின் தியாகங்களை நினைவு கூறும் வகையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் நேற்று வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

துப்பாக்கி குண்டு...

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூணில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் மலர் வளையம் வைத்து, கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பணியில் இருந்த போது இறந்த 377 பேருக்கும் அஞ்சலி செலுத்தினார். அப்போது 3 முறை துப்பாக்கியால் வானை நோக்கி மொத்தம் 60 குண்டுகள் சுட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பணியின் போது உயிர் நீத்த போலீசார், விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்றும், அவர்களின் தியாகம் வீண்போகாது என்றும், தியாகத்தை போற்றும் வகையிலும் உறுதி மொழி ஏற்றனர். பின்னர் நினைவுத்தூணில் போலீசார் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ் (நகரம்), ஜெயராஜ் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), லோகேசுவரன் (மணியாச்சி), மாயவன் (ஸ்ரீவைகுண்டம்), வெங்கடேஷ் (கோவில்பட்டி), சிவசுப்பு (மதுவிலக்கு), இன்ஸ்பெக்டர்கள் சுடலைமுத்து (ஆயுதப்படை), ராஜாராம் (தென்பாகம்), ரபி சுஜின்ஜோஸ் (வடபாகம்), வனிதா (தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ்), மயிலேறும் பெருமாள் (போக்குவரத்து) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story