தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. முன்னிலையில் மாற்று கட்சியினர் 1000 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாற்று கட்சியினர் 1000 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
தூத்துக்குடியில் மாற்று கட்சியினர் 1000 பேர் கனிமொழி எம்.பி. முன்னிலையில் நேற்று தி.மு.க.வில் இணைந்தனர்.
மாற்று கட்சியினர்..
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாற்று கட்சியினர் சுமார் 1000 பேர் கடம்பூரை சேர்ந்த எஸ்.வி.பி.எஸ். நாகராஜா தலைமையில், தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து கனிமொழி எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இணைந்து
கடந்த 1½ ஆண்டுகளாக தமிழகத்தை இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு நல்லாட்சியை முதல்-அமைச்சர் நடத்தி வருகிறார்.மத்திய அரசை தைரியாக எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரு கம்பீரமான ஆட்சியை, தி.மு.க.ஆட்சியை நடத்தி வருகிறார். தி.மு.க. அரசியல் கட்சி மட்டும் அல்ல. சமூக இயக்கம் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். நம்முடைய குழந்தைகள் படிக்க வேண்டும், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும், அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், சுய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைக்க கூடிய இயக்கம் தி.மு.க.
ஆகையால் தமிழ்நாட்டில் முன்னேற்றம், சமூக நீதி வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணியாற்றக்கூடிய இந்த தி.மு.க.வுடன் உங்களை இணைத்து உள்ளீர்கள். உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நாம் அத்தனை பேரும் இணைந்து பணியாற்றுவோம். தமிழர்கள் ஒன்றாக இணைந்து பாடுபடும் போது தமிழ்நாட்டுக்கே நன்மை தரக்கூடியதாக அமையும். அது நமக்கு பலன் தரக்கூடிய ஒன்றாக நிச்சயமாக இருக்கும். தி.மு.க. மூத்த முன்னோடிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்கள் இந்த இயக்கத்துக்கு செய்த உள்ள தியாகங்கள், உழைப்பு அத்தனையும் உணர்ந்து அவர்களோடு இணைந்து நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
விழாவில் ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னமாரிமுத்து, கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.