தூத்துக்குடியில்லாரி டிரைவருக்கு அடி-உதை
தூத்துக்குடியில் லாரி டிரைவரை அடி-உதைத்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக உள்ளார். இவர், மற்றொரு நிறுவனத்தின் டிரைவரான முத்தையாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (23) என்பவர், தனது டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் உள்ள லாரி ஜாக்கியை எடுத்து சென்று விட்டதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில் பாதுகாப்பு படையினர், பாலகிருஷ்ணனின் லாரியில் இருந்த ஜாக்கியை மீட்டு பேச்சிமுத்துவிடம் ஒப்படைத்தனர்.
இந்த முன்விரோதம் காரணமாக பாலகிருஷ்ணன், அவர் பணியாற்றி வரும் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர், மற்றொரு டிரைவர் ஸ்ரீகணேஷ் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து வ.உ.சி. துறைமுகம் நிலக்கரி யார்டில் இருந்த பேச்சிமுத்தை தாக்கினா். மேலும் ஒரு லாரியை கொண்டு, பேச்சிமுத்து வேலைபார்த்து வந்த நிறுவனத்தின் 2 லாரிகள் மீது மோதி சேதப்படுத்தினர். இதனை செல்போனில் படம் பிடித்த காவலாளியின் செல்போனையும் உடைத்தனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.