தூத்துக்குடியில்மார்ச் 4-ந்தேதி மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம்


தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மார்ச் 4-ந்தேதி மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இணையதள பதிவை புதன்கிழமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமுக்கான இணையதள பதிவை கனிமொழி எம்.பி. நேற்று காலை தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்கான வேலைநாடுநர்களுக்கான இணையதள பதிவு தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு இணையதள பதிவை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் பேச்சியம்மாள், தேசிய தகவலியல் மைய அலுவலர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

10 ஆயிரம் பேர்

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4.3.23 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து 200 நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைதேடும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கும் முகாமாக இருக்கும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து அதற்கான ஒப்புகை சீட்டை பெறலாம். அந்த ஒப்புகை சீட்டுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த பகுதியில் வேலைதேடும் பலருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவு செய்யாதவர்கள் வந்தாலும் அங்கேயே பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முன்கூட்டியே பதிவு செய்தால், உங்கள் விவரங்களை நிறுவனங்கள் பார்த்து எளிதில் தேர்வு செய்வதற்கு வசதியாக இருக்கும்.

இதற்கு முன்பு நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அப்போது சில நிறுவனங்கள் முதல்கட்ட நேர்காணலை முடித்து விட்டு அடுத்தகட்ட நேர்காணலுக்கு அவர்களுடைய நிறுவனத்துக்கு அழைக்கின்றனர். அங்கு நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. நேரடியாகவும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story