தூத்துக்குடியில் திருடிய மோட்டார் சைக்கிளுடன் பக்கிள் ஓடையில் விழுந்த மர்மநபர்
தூத்துக்குடியில் திருடிய மோட்டார் சைக்கிளுடன் பக்கிள் ஓடையில் விழுந்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி பக்கிள் ஓடையில் திருடிய மோட்டார் சைக்கிளுடன் விழுந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். மோட்டார் சைக்கிளை மீட்ட போலீசார் மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மோட்டார் சைக்கிள்
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. மழைநீர் வடிகால் ஓடையான பக்கிள் ஓடையில் கழிவுநீர் செல்கிறது. இந்த நிலையில் ஜெயராஜ் ரோடு பண்டுக்கரை சாலை பகுதியில் உள்ள பக்கிள் ஓடையில் ஒரு மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்தது. நேற்று காலையில் இதனைபார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து பக்கிள் ஓடையில் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர். மேலும் யாரேனும் ஓடையில் விழுந்து கிடக்கிறார்களா? என்று போலீசார் தீவிரமாக தேடிப்பார்த்தனர். ஆனால் யாரும் இல்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஓடையில் விழுந்து இருக்கலாம் என்றும், அவரை யாரேனும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
மீட்பு
அதேநேரத்தில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளை கொண்டு, அதன் உரிமையாளரை கண்டுபிடித்தனர். அவர் தெர்மல்நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டதாக தெர்மல்நகர் போலீசில் புகார் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளை திருடி ஓட்டி வந்த மர்மநபர் நிலை தடுமாறி பக்கிள் ஓடையில் விழுந்து இருப்பது தெரியவந்தது. மேலும் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதால், அதனை மீட்க முயற்சி செய்யாமல் ஓடையில் விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கிள் ஓடையில் மோட்டார் சைக்கிள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.