தூத்துக்குடியில்கொரோனாவுக்கு முதியவர் பலி


தூத்துக்குடியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு முதியவர் பரிதாபமாக இறந்தார். மாவட்டத்தில் 52 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதியவர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 75 வயது முதியவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி திருச்செந்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாவு

இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த முதியவரின் உடல் கொரோனா கவச பாதுகாப்புடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

52 பேர் சிகிச்சை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 2 பேர் கொரோனா பாதிப்பால் இறந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, தற்போது உருவாகி உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டு 52 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story