தூத்துக்குடியில்துறைமுக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் துறைமுக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி துறைமுக ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வ.உ.சி துறைமுக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் சிவனாகரன் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ சலுகைகளை பறிக்கக் கூடாது. ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர்கள் அனைவருக்கும் முழு ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும். துறைமுக ஊழியர்களுக்கான புதிய ஊதிய உயர்வை 1.1.2022 முதல் வழங்க வேண்டும். துறைமுக மருத்துவமனையை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி ராஜகோபாலன், ஏ.ஐ.டி.யு.சி பாலசிங்கம், சி.ஐ.டி.யு ராயன், ரசல், கோபால், பாலகிருஷ்ணன் மற்றும் துறைமுக ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.