தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்
தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார்.
காளி ஊர்வலம்
ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டு தோறும் தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு வேடமணிந்த தசரா குழுவினர் இந்த காளி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பல்வேறு விதமான வேடமணிந்த காளிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று சென்றனர். நிகழ்ச்சிக்கு ருத்ர தர்ம சேவா நிறுவனர் தா.வசந்தகுமார் தலைமை தாங்கினார். இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலம், பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பஸ் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் முன்பு நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மாநில பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் சாஸ்தா, கன்னியாகுமரி மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் முத்து, மாநல அமைப்புக்குழு தலைவர் பொன்னுச்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பாக காளி வேடமணிந்திருந்த பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ருத்ர தர்ம சேவா நிர்வாகிகள் செய்து இருந்தனர்.