தூத்துக்குடியில் பூமாலை வணிக வளாகத்தில் குறைந்த வாடகைக்கு கடைகள்


தூத்துக்குடியில் பூமாலை வணிக வளாகத்தில் குறைந்த வாடகைக்கு கடைகள்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பூமாலை வணிக வளாகத்தில் குறைந்த வாடகைக்கு கடைகள் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூமாலை வணிக வளாகத்தில் குறைந்த வாடகைக்கு உள்ள கடைகளுக்கு மகளிர் சுயஉதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

பூமாலை வணிக வளாகம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் (மாவட்ட நூலகம் எதிர்புறம்) மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மாவட்ட பூமாலை வணிக வளாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வணிக வளாகத்தில் குறைந்த வாடகைக்கு கடைகள் ஒதுக்கீடு பெற்று பொருட்களை விற்பனை செய்யலாம்.

விண்ணப்பிக்கலாம்

கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக சுய உதவிக்குழுவினர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். கடைகள் ஒதுக்கீடு பெற தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தூத்துக்குடி அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் தனி நபர்கள் (ஆதரவற்ற விதவை/ கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்/ ஒற்றை பெண்கள்/ மூன்றாம் பாலினத்தவர்/ மாற்றுத்திறனாளிகள்) மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் விண்ணப்பிக்கலாம்.

முன்வைப்பு தொகை

அனைத்து பொருட்கள் விற்பனை, டீ கடை, அழகு நிலையம், ஜெராக்ஸ் கடை ஆகிய பயன்பாட்டுக்கு கடை வாடகைக்கு விடப்படும். வாடகை காலம் மாதம் அல்லது அரையாண்டு காலம் மட்டுமே வாடகைக்கு கடை ஒதுக்கீடு செய்யப்படும். செயல்பாட்டின் அடிப்படையில் புதுப்பித்து தரப்படும். மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் நிர்ணயிக்கும் வாடகை, மின்சார கட்டணம் மற்றும் முன்வைப்பு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story