தூத்துக்குடியில்அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டம்
தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் தண்ணீர் பந்தலை அகற்ற மாநகராட்சியினர் முயன்றதை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பந்தல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் 7 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதே போன்று தி.மு.க., பா.ஜனதா மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தண்ணீர் பந்தல்களை அகற்றுவதற்கு மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இடையூறாக இருக்கும் தண்ணீர் பந்தல்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
சாலை மறியல்
நேற்று மாலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பந்தலை அகற்றுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அப்போது, அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் இருந்தனர். இதனால் தண்ணீர்பந்தலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மாநகராட்சியில் ஆணையாளரை சந்திப்பதற்காக சென்றனர். அங்கு அதிகாரிகள் இல்லாததால், மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பழைய பஸ்நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மட்டும் அகற்றுவதை கைவிட வேண்டும், பழைய பஸ்நிலையம், தீயணைப்பு நிலையம் ரோடு உள்ளிட்ட இடங்களிலும் தி.மு.க. சார்பில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு உள்ள தண்ணீர் பந்தலையும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.