தூத்துக்குடியில்திடீர் கடல் கொந்தளிப்பு
தூத்துக்குடியில் திடீர் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சுமார் 60 அடி தூரத்துக்கு கடல்நீர் வெளியேறி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடல் சீற்றம்
தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டமாக விளங்கி வருகிறது. ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு கடல் சீற்றமாக காணப்படுவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாக உள்ளது. பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் நீர் மட்டம் உயர்ந்து வரும். ஆனால் சில நேரங்களில் வழக்கத்தை விடவும் அதிக அளவில் தண்ணீர் கரையை தாண்டி செல்கிறது.
அதன்படி தூத்துக்குடி தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதி, ராஜபாளையம் பகுதி உள்ளிட்ட இடங்களில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடல் நீர், கரையை தாண்டி சுமார் 60 அடி தூரம் ஊரை நோக்கி வந்து சாலையை தொட்டு தேங்கி நிற்கிறது. இதனால் கடற்கரையில் உள்ள மீன் ஏலக்கூடம், ஆலயம் உள்ளிட்டவற்றை கடல்நீர் சூழ்ந்து நிற்கிறது. அதே போன்று கடல் அலையின் வேகமும் அதிகமாக உள்ளது.
சேதம் தவிர்ப்பு
இதுகுறித்து மீனவர் லூர்து கூறியதாவது:-
தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதியில் சுமார் 60 அடி தூரம் கடல்நீர் கரையை தாண்டி வெளியில் வந்துள்ளது. ஊருக்குள் செல்லும் சாலை வரை தண்ணீர் வந்து தேங்கி நிற்கிறது. அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும். ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிக சீற்றத்துடன் கடல் காணப்படுகிறது.
பகல் நேரத்தில் கடல் நீர் கரையை கடந்து வந்து இருப்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் படகுகள் அனைத்தும் மீன்பிடித்தலுக்காக கடலுக்கு சென்று விட்டன. கரையில் நிறுத்தப்பட்டு இருந்தால் கடல் சீற்றதால் படகுகளில் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
---------